search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர் உயிரியல் பூங்கா"

    • கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
    • மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சென்னை :

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர்.

    நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்ததால் பூங்கா நுழைவாயில் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் போன்றவற்றை குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

    பூங்காவில் உள்ள 20 டிக்கெட் கவுண்ட்டர்களில் 10 டிக்கெட் கவுண்ட்டர்கள் மட்டுமே திறந்து இருந்தது. இதனால் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வந்த பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை பெற முயன்றனர். பூங்கா ஊழியர்களும் பூங்காவுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்க முடியாமல் திணறினார்கள்.

    இதனால் அவ்வப்போது நுழைவு டிக்கெட் வழங்கும் இடத்தில் சலசலப்புகளும், பரபரப்பும் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் குடும்பத்துடன் பூங்காவை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

    அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி படப்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாநகர போக்குவரத்து மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பூங்காவில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    எதிர்பார்த்ததைவிட நேற்று கூட்டம் அலைமோதியது. பூங்காவுக்கு ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ள காரணத்தால், 10 கவுண்ட்டர்கள் மட்டுமே டிக்கெட் வாங்குவதற்காக திறந்து வைத்திருந்தோம்.

    ஆனால் ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி பற்றி பலருக்கு தெரியாததால் பூங்காவில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகரித்தது. எனவே இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக வண்டலூர் பூங்காவுக்கு டிக்கெட் வழங்கப்படுவது பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் புத்தாண்டு விடுமுறையையொட்டி மாமல்லபுரத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அர்ச்சுனன் தபசு, கணேசரதம், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள சிற்பங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று காலையில் பனி மூட்டத்தால் குளிர் நிலவிய சூழலில், பகலில் வெயில் அதிகமாக வாட்டி வதைத்ததால் பலர் புராதன சின்ன வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.

    அர்ச்சுனன் தபசு சிற்ப வளாகத்தில் உள்ள உயரமான பாறைக்குன்று மீது ஏறிய வாலிபர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தனர். அவர்களை தொல்லியல் துறை பாதுகாவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

    நேற்று சுற்றுலா பயணிகள் அதிகமானோர் மாமல்லபுரத்தில் திரண்டதால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவை ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்லவன் சிலை அருகே மாற்றப்பட்டது. மாலை 5 மணி முதல் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பஸ்கள் வராததால் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாமல்லபுரம் போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு பஸ்சாக வந்தது. அதில் ஏறி பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
    • பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டா மிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டு உள்ளது. இதற்கு முன்பு கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் இதேபோல் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்பு 17 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஏராளமான கார்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி நீண்ட காலத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும்.
    • உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்குதல் வேண்டும்.

    சென்னை:

    தலைமை செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலங்களில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பூங்காவிற்கு வருமானம் இல்லாதபோது, உயிரியல் பூங்காவின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூ.6 கோடியை ஒதுக்கியது.

    உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைக் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாக்க அரசாங்கம் எடுத்த இந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பரவலாகப் பாராட்டப்பட்டன.

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, உலகத்தரம் வாய்ந்த சில உயிரியல் பூங்காக்களில் ஒன்று. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, முழுமையான இயற்கைச் சூழலில் வாழ்வதற்கு ஏற்றாற்போல் இந்தப் பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது.

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    உயிரியல் பூங்காக்கள், விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவதைத் தவிர, அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வனவிலங்குப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பூங்காவின் மேம்பாட்டிற்காக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:-

    மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி நீண்ட காலத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்குதல் வேண்டும்.

    தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

    உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது மட்டுமன்றி, வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும்.

    உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களுக்கு உகந்த வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

    உயிரியல் பூங்காவானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து,

    * சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வு அறைகள்

    * மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும்

    * பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகவல் சாதனங்கள் ஆகிய வசதிகளை மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைத் தவிர, வேலூர் மாவட்டம் அமிர்தியிலும், சேலம் குரும்பப்பட்டியிலும் தமிழ்நாடு அரசு உயிரியல் பூங்காக்களை அமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

    வனவிலங்குகள் மற்றும் வனஉயிரினப் பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நாங்கள் ஆழ்ந்த மன உறுதியோடு இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைவரும் முனைப்பான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள் கிறேன்.

    கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹிப் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×